இரா. இரவி ஒரு படைப்பாளி - அதுவும் ஒரு ஹைகூ கவிஞர் என்பதால் - தமது ஆய்வினை முத்தாய்ப்பான வரிகளுடன் முடிப்பதில்தனிக்கவனம் செலுத்துகிறார்.
"மூன்று வரி
முத்தாய்ப்பு
ஹைக்கூ"
என்பது ஹைக்கூ குறித்து இரவி தீட்டியிருக்கும் ஹைக்கூ.
எனவே இதன் தாக்கத்தை அவர் திறனாய்விலும் காண முடிகின்றது. உண்மையான படைப்பு எப்படியேனும் 'ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தைக் காட்டியே தீரும். அது போல, ஒரு நடுநிலையான - திறனாய்வாளரை அடையாளம் காட்டியே தீரும்.
"மனத்தளவில் மெல்லினம்
மக்கட் பண்பில் இடையினம்
முற்போக்குச் சிந்தனையில் வல்லினம்'
என நாம் இராவி இரவியை மதிப்பிடலாம். இரவி படைப்புலகிலும் திறனாய்வுத் துறையிலும் பீடு நடை பயில - தடம் பதிக்க - சாதனை படைக்க என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை இத்தருணத்தில் உரித்தாக்குகின்றேன்.இரா. மோகன்.