கடந்த 40 ஆண்டுகளில் அதிகம் பேசப்படும் ‘பயங்கரவாதம்’ எனும் கருத்தாக்கம் இந்நூலின் உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. 80களுக்குப்பிறகு சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப் பிறகு மேற்கு நாடுகள் உலக அரசியலை மறு கட்டமைப்பிக்கு உள்ளாக்கின. ‘உலகமயமாக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் ஒன்று உருவாக்கப்பட்டது. மேற்கத்திய முதலாளியத்தின் சுதந்திரப் பொருளாதாரத்தின் கீழ் ஆட்படாத மூன்றாம் உலக நாடுகளை சோவியத் சரிவுக்குப் பிறகு தமது செல்வாக்கினுள் ஆட்படுத்துவதே உலகமயமக்குதல் என்பதாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தேசிய விடுதலையை ஈட்டிய நாடுகளை சோவியத் செல்வாக்கிலிருந்து முழுதும் விடுவித்தலே உலகமயமாக்கம்.
உலகமயமாக்கத்திற்குத் துணையாக உருவாக்கப்பட்ட முதலாளியத்தின் ராணுவக் கொள்கையே பயங்கரவாதம். அதாவது உலகமயமாக்கலை (ஏற்காத) எதிர்க்கும் மூன்றாம் உலக நாடுகளை பயங்கரவாத நாடுகள் என முத்திரை குத்தி தமது ராணுவச் செயல்பாடுகளுக்குள் கொண்டுவருவதே மேற்கத்தியத் திட்டம்.