book

தமிழ் மொழி வரலாறு

₹235+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :339
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123437224
Add to Cart

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தனக்கென ஒரு வாழ்வையும் வரலாற்றையும் வகுத்துக் கொண்ட பெருமை கொண்டது நம்நாடு. இலக்கியத்திலும் இலக்கணத்திலும் தனக்கெனத் தனியொரு பாரம்பரியத்தைக் கொண்டு வாழ்ந்தது இந்நாடு. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியரைப் பெற்றெடுத்தது இந்நாடு. தமிழ் மொழி நீண்ட ஒரு வரலாற்றினையும் நெடிய ஓர் இலக்கண, இலக்கியப்பாரம்பரியத்தையும் பெற்றுள்ளது. தமிழ்மொழி சீனம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகளை ஒப்பத் தொன்மை வாய்ந்திருக்கின்றது. திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே அளவிட வொண்ணாப் பண்டைக் காலம் முதல் பயின்று வருவது. பழமைக்கும் பழமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நமது தமிழ்மொழி உலக அரங்கிலே தனியொரு நிலையை எய்தி நிற்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பேசப்படுகின்ற நிலையிலும் உயர் தனிச் செம்மொழியாக விளங்கும் நிலையிலும் தமிழ் மொழியை உலக மொழியாகக் கருதலாம் என அறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.'
தமிழ் மொழியின் தோற்றம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாகவே விளங்குகிறது. தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. மூன்று அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே சிறப்பு மிக்க இலக்கியங்கள் பல இருந்திருக்கவேண்டும். தொல்காப்பியத்தின் செய்யுள் இயல் முதலியவற்றை நோக்கின் இவ்வுண்மை புலனாகும். தொல்காப்பியத்திற்குப் பின்னர் வாழையடி வாழையாக ஓர் இலக்கிய வரலாற்றைக் கொண்டு விளங்குவது தமிழ். இலக்கியப் பாரம்பரியமும் தமிழுக்கு உண்டு. 'தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம் போன்ற பல்வேறு மரபு இலக்கணங்கள் வாழையடி வாழையாகத் தோன்றியுள்ளன. இலக்கிய, இலக்கணப் பாரம்பரியத்தைப் போலவே, தமிழ் மொழியில் ' நிறையக் கல்வெட்டுக்கள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதலே தொடர்ந்து கிடைத்துள்ளன. இத்தகைய கல்வெட்டுக்கள் பழம்பெரும் வரலாறுகள் பலவற்றைப் பறைசாற்றி நிற்பதோடு அவை எழுதப்பட்டிருக்கும் மொழியின் தன்மையையும் காட்டி நிற்கும்.