சென்னையில் பத்து ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று நான் பிறந்து வளர்ந்த ஊரான பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது எனது பிள்ளைப் பிராயத்து நினைவுகளில் பதிந்திருந்த அமைதி நிறைந்த பெங்களூர் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. எனக்குத் தெரிந்த ஊராக இருக்கவில்லை. கிட்டத்தட்ட அன்னியமாக நான் உணர்ந்த சமயத்தில் பெங்களூரின் புதிய ஆளுமை என்னை சுவாரஸ்யப்படுத்திற்று. நான் பெங்களூர் வந்த பிறகு இங்கு நதி நீர் பிரச்சினையால் நிகழ்ந்த கலவரங்களையும், பயங்கரவாத குண்டுவெடிப்பு நிகழ்வுகளையும் கண்டபிறகு இந்தக் கேள்விகள் என்னைத் துன்புறுத்தின. என்னுடைய நண்பரும், எனது சில படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருபவருமான திரு கல்யாணராமன், நான் இளைய தலைமுறையினரைப் பற்றி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஒரு நாவல் எழுதவேண்டும் என்று சொன்னார். ஏற்கெனவே என் மனத்தில் தோன்றிவிட்ட வித்துக்கு அது உரமளித்ததுபோலத் தோன்றிற்று. இங்கு நான் சந்தித்த இளைஞர்கள், அவர்களிடம் நான் தெரிந்துகொண்ட, அவர்களது சூழலைப் பற்றின தகவல்கள், வல்லினமே மெல்லினமே நாவல் உருவாக உதவின. எதிர் காலத்தைப் பற்றின நம்பிக்கையை அவர்கள் ஏற்படுத்தினார்கள். அவர்களிலிருந்து உருவான கதாபாத்திரங்கள்தான் நாவலின் கதைமாந்தர்களாக வரும் பிரபு, குமரன், ஓமார், தீபா, மாலதி மற்றும் ஊர்மிளா. அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. - வாஸந்தி