மறந்துபோன பக்கங்கள்
Maranthu pona pakkangal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செங்கோட்டை ஸ்ரீராம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936495
குறிச்சொற்கள் :அனுபவங்கள், பொக்கிஷம், சிந்தனை, தகவல்கள்
Add to Cartஅனுபவம் என்பது, பல ஆண்டுகள் முயன்று பெறுவது. ஆனால் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மூத்தோரிடமிருந்து கேட்டுப் பெறுவதால், அந்த அனுபவ அறிவு பெறுவதற்காக செலவழிக்கும் காலத்தை மிச்சப்படுத்த ஏதுவாகிறது. வாழ்வில் ஒவ்வொரு முறையிலும், ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பெரும்பாலோர், தங்கள் அனுபவ அறிவை இளையவர்களுக்கு தாராளமாகத் தரக் காத்திருக்கிறார்கள்.
நம் நாட்டின் பழைமையான நூல்கள் பலவும், அனுபவங்களைத் தாங்கியவையே. ஆனாலும் தீயைத் தொட்டால் சுடும் என்கிற அனுபவப் பாடத்தைக் கேட்பதைவிட, செயலில் தாமே ஈடுபட்டு உண்மைதான் என்கிற அனுபவத்தைப் பெறவே இன்று நம்மில் பலரும் விரும்புகின்றோம்.
தலைமுறை தலைமுறையாக நம்மிடையே புழங்கிவரும் நீதிக்கதைகள் ஒருவகையில் அறவுணர்வையும் நன்னெறியையும் போதிக்கும் அனுபவப் பாடங்கள் எனலாம். இன்றோ, நாம் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோய் வருகின்ற காரணத்தால், நம் பண்டைய அறிவுப் பொக்கிஷங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாது போகிறது...
இந்நூல் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளது. பண்டைய இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட வாழ்வியல் செய்திகள், ஆன்மிக பக்தி இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை முறை, மண்சார்ந்த சிந்தனைகள், வீரமும் அறிவும் வெளிப்படுத்திய தியாகியர், கம்பனும் ரசிகமணி டி.கே.சி.யும் காட்டிய வாழ்வியல் இலக்கியம், கணிதம்; வானியல்; அறிவியல் என்று பல தளங்களில் இந்நூல் சிந்தனைகள் விரிவடைகின்றன.
பலரும் மறந்து போய்விட்ட, ஆனால் மறக்கக் கூடாத செய்திகள் தற்கால வாழ்வியல் நோக்கில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. வீரன் வாஞ்சிநாதன், அமரகானம் படைத்த எஸ்.ஜி.கிட்டப்பா, கணிதமேதை எஸ்.எஸ்.பிள்ளை என்று மாமனிதர்களைப் பற்றிய பதிவுகள், இளந்தலைமுறை நினைவில் பதித்துக்கொள்ள வேண்டியவை. ஆழ்வார்கள் காட்டிய அமுதத் தமிழும் கம்பனின் கவிதை நயமும் ரசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
சின்னச் சின்னக் கதைகள் மூலம் மேலாண்மைத் தத்துவங்கள் காட்டப்படுவது வித்தியாசமான நோக்கு. தலைமுறை வேறுபாடின்றி அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது இதன் சிறப்பு.