தனக்கென யோசிக்கும் தாயோ... தந்தையோ... ஏன் தங்கையோ இல்லாமல் போனதில், தனக்கொரு தூணைத் தேடி... அதில் சாய்ந்து கொள்ளத் துடித்தது மனம். சார்ந்து வாழ்ந்தே பழகிய பார்வதிக்கு, சாயத் தோளில்லாமல் போன வேளையில், பிரணவ் ஆலமரமாய் வந்து நின்றது போலிருந்தது. இந்தச் சூழ்நிலையை எப்படி தனியாக எதிர்கொள்ளப் போகிறோம் என்று மலைத்து நின்றவளுக்கு, "நீயும் நானும் சேர்ந்தே தாங்குவோம்" என்ற உறுதிமொழியுடன், அவன் நிற்பது போல் மனம் அவனை நாடியது. பயம் படிந்த கண்கள் பீதியில் விரிய, "அப்பா... அப்பா... எப்படி இருக்காங்க" என்றவளின் நடுங்கிய விரல்கள் நீண்டு அவனது கரங்களைப் பற்றியதா இல்லை பிரணவின் கரங்கள் அவளை நடுங்க விடாமல் பிடித்துக் கொண்டவனா என்று ஆராய நேரமிருக்கவில்லை.