வாழ்க்கை வெளியெங்கும், விசுவரூபத்திரைகளாய், விதவிதமான துறைகள், எல்லா இடங்களிலும் உயிரோவியமாய் ஓளிவீசும் எத்தனையொ சாதனை உருவங்கள், அத்தனையுமே, உழைப்பு என்னும் ஓற்றைத் தூரிகை கொண்டே வரையப்பட்டவை. தொழில் உலகம், கலையுலகம், அறிவியல் உலகம் என்று எத்தனையோ துறைகளில் முத்திரை பதித்த முன்ணணி மனிதர்களின் வெற்றிக்கதைகள் இங்கே தொகுக்கப் பட்டிருக்கின்றன. காயங்களையும் சோகங்களையும் கடந்து நம்பிக்கையைத் தளரவிடாமல் நடந்து நடந்து வெற்றிப் பாதைக்கு வந்து சேர்ந்தவர்கள் இவர்கள். இத்தகைய மனிதர்களின் வாழ்க்கை யெங்கும் வியப்பூட்டும் சம்பவங்கள் விரிந்து கிடக்கின்றன. படிப்பவர்கள் மனதில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகின்றன. தொடங்கும் போது வரும் தோல்விகளுக்குத் துவண்டு விடலாகாது என்பதையே, இவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது. பிறக்கும் போதே சிறக்கும் விதமாய் வாழ்ந்த ஓரிருவரைத் தவிர, இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பவர்களின் வாழ்க்கை, இடி மின்னல் தாக்கிய வானமாகவே இருந்திருக்கிறது. திரிலோக சஞ்சாரிய என்கிற புனைபெயரில் நமது நம்பிக்கை மாத இதழில் எழுதிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இது. இதனைப் பதப்பிக்கும் கற்பகம் புத்தகாலயம் திரு. நல்லதம்பி அவர்களுக்கு என் நன்றி.
மரபின்மைந்தன். ம.முத்தையா.