ருது என்பதற்கு பூப்பு எய்தல்' என்றும் ' சமைதல் ' என்றும் 'திரட்சி' என்றும் கூறுவர். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
என்பது ஒளவையின் வாக்கு. பெண்ணில்லாமல் மண்ணில் இன்பங்கள் பெற முடியாது. ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே என்று கழிபேருவகை அடைபவள் பெண் . அதனால் தான் நம்மவர்கள் வீசு தென்றலையும் வீங்கிள வேனிலையும் பால் மதியையும் மால் வண்ணனையும் பெண்ணெனவே கற்பனைத் திறத்தால் பாடிக்களித்தனர். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா -என்று தேசிய விநாயகம் பிள்ளை பாடியது நினைவில் சுழல்கிறது. தாயாய் நிற்பதும் பெண். தயைமிக்க காதலியாய் வருவதும் பெண். காக்கும் தயாபரியாய் வருவதும் பெண். கண்ணில்லாத பேரும் பெண்ணில்லாமல் வாழ்வது இல்லை. இத்தகு கூற்றை அறிஞர்கள் முதல் ஞானிகள் ஈறாக யாரும் மறுத்திடவில்லை என்பது உலகறிந்த உண்மை. பொய்யா மொழிப்புலவர் வள்ளுவன் இல்லாள் அகத்திருக்க இல்லாத்து ஒன்றுமில்லை என்று பெருமையுடன் கூறுகிறார். பெண்ணின் பெருமை பேசி முடியாது பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது முதுமொழி பெய்யெனப் பெய்யும் மழை - இத்தகைய பெருமைகள் பெண்ணுக்கு உண்டு.
- பதிப்பகத்தார்.