ஞாநியின் ‘தவிப்பு’ – நாவல் விமரிசனம்
“துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது” அரசியல் சித்தாந்தமல்ல
துப்பாக்கியால் ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா?
நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா?
உயிரைத் துறக்கும் போராளிக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா?
நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை.
ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த ஞாநியின் (பத்திரிகையாளர்) ‘தவிப்பு’ எனும் நாவல் நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய ‘நந்தன்’ சிறப்பாசிரியர் சுப. வீரபாண்டியன், தனித்தமிழ்நாட்டிற்கான நியாயங்களை ஞாநி நேர்மையாக, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரென்றும், எனவே அந்த வகையில் உள்ளடக்கத்தில் தனக்கு முரண்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.
“பஞ்சாப், அசாம் மாநிலங்களில் நடந்த போராட்டங்களும் அவற்றை டெல்லி ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட விதமுமே இந்தக் கதைக்கு ஆதார நிகழ்ச்சிகள். அவற்றை தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துவதாக மாற்றி அமைத்துக் கற்பனை செய்திருக்கிறேன்” என்று தன் முன்னுரையில் கூறுகிறார் ஞாநி.