இறைவன் நம்மை மனிதனாக படைத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும். உலகிலுள்ள எந்த உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு அருள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அருள்தான் எண்ணம். எண்ணத்தின் மூலம் நாம் நன்றாக வாழ வழிகாட்டி இருக்கிறான் இறைவன். வாழ்க்கைக்கு ஊக்கமும் ஆக்கமும் தருவது, ஏக்கத்திற்கும் தயக்கத்திற்கும் தடை போடுவது, நன்மையும் நலத்தையும் கொடுப்பது எண்ணம்தான்.வாழ்க்கையை உருவாக்குவது எண்ணமே. நல்ல எண்ணம் நன்மையில் முடியும் என்ற உண்மையை அவனியை ஆண்ட அரசர்கள்,அகிம்சாமூர்த்திகள்,அகிலம் எங்கும் அறியப்பட்ட அறிஞர்கள்,அன்பை அறிவுறுத்தியவர்கள் இவர்களுடைய வரலாற்றை ஆராய்ந்தால் இந்த உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். எண்ணம் வாழ்க்கையை உருவாக்குகின்ற கருவியாகும்.