ஓர் இலட்சியப் பெண்ணை மையமாகக் கொண்டு தமிழில் நாவல்கள் வெளிவருவது அபூர்வமாக இருக்கிறது. தற்காலத்தில் பெரும்பான்மையான நாவல்களின் கதாநாயகிகள் மேலோட்டமாக வாழ்பவர்களாகவோ, சமையற்கட்டே உலகம் என நினைப்பவர்களாகவோ உள்ளனர், தமிழ் நாவல் உலகில் முன்பொரு 'பூரணி எழுந்தாள்' அநீதிகளை எதிர்த்தாள்; வெற்றியும் பெற்றாள். நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலின் கதாநாயகி பூரணி நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு அப்பெயர் சூட்டப்படக் காரணமாக அமைந்தாள். பல்லாண்டுகளுக்குப் பின்னர் அப்படி ஒரு வீர யுவதி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் மறு அச்சு, இந்துமதி 'வைகறை வெளிச்சம்' நாவலின் முக்கியப் பாத்திரமாக அமைந்து வாசகர்களின் நினைவில் நிரந்தரமாக வீற்றிருக்க வந்துள்ளாள்.