'சிறுதுளி பெருவெள்ளம்' இது சேமிப்பின் விளைவை- பயனை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லும் பழமொழி. சிக்கனம் வீட்டைக் காக்கும் சேமிப்பு நாட்டைக் காக்கும் - இது நாடறிந்த முழக்கம் இந்த மொழிகளின் அடிப்படையில் உருவானவை இந்நூலில் உள்ள இரு நாடகங்கள். 'அறிவுடை நம்பியும் அற்புத விளக்கும்' என்ற நாடகம் மருதூர் என்ற கிராமத்தை உங்கள் கண்முன்னே நிறுத்தும். கல்வியும் பணமும் இருந்தாலும் வஞ்சகம் அவற்றோடு கூட்டணி அமைத்து ஊரை என்ன பாடுபடுத்துகிறது? ஏழையிடம் கல்வியில்லை, பணமும் இல்லை. கல்வியறிவில்லாமல் அவன் அடையும் செல்வம் அவனுக்கு உதவியாக இல்லை. இவையெல்லாம் கிராமத்து அவலங்கள்! இந்த அவலங்களைத் துடைக்க வருகிறான் அறிவுடைநம்பி. அவன் கையில் ஓர் அற்புத விளக்கு! அது என்ன விளக்கு? நாடகம் விடை சொல்லும்!