வேடதாரிகளும் போலிகளும் பெருகிவிட்ட ஆன்மிக உலகுக்கு லௌகீகத்தின் இயல்பைப் புரிந்துகொண்ட ஒரு நிதர்சன மனிதன் பிரவேசித்தால் எப்படியிருக்கும்? இந்தக்கேள்விக்கு 'ஞானகுரு'வில் பதில் இருக்கிறது. தனக்கு முன் மிதக்கும் இலைகளைக்கூட வாஞ்சையுடன் ஏந்திக்கொள்ளும் காதல் மிகுந்த துறவி இந்த 'ஞானகுரு'!
மடங்களையும் ஆசிரமங்களையும் கட்டிக்கொண்டு ஏமாற்றும் போலிச்சாமியார்களுக்கு நடுவே, ரகசியங்களோ அதிசயங்களோ எதுவும் இல்லாமல் நம்மை நெருங்குகிற புதிய ஆன்மிக அனுபவம் இது.
சாதகமாகவே எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் மனித இயல்புகளை மீறாத்த தத்துவ விசாரணைகளைப் பேசும் இந்த 'ஞானகுரு', விதவிதமான கேள்விகளோடு நெருங்குபவர்களை பரிகசிப்பதில்லை. மாறாக, அவர்களின் பலவீனங்களுக்குதீர்வுகள் சொல்கிறார். மனிதன் திருப்தியடைகிற மாதிரி நிறைய பதில்களை இவர் வைத்திருக்கிறார். தேடி வருபவர்களைப் பதில்களால் குழப்பி, திரும்பத் திரும்ப தன்னைச் சரண்டைய வைக்கும் சிலருக்கு மத்தியில், வாழ்வின் ருசியைக் கற்றுக்கொடுத்து அனுப்பி வைக்கிறார் இந்த 'ஞானகுரு'.
எஸ்.கே. முருகன் தன் எழுத்தின் மூலம், தத்துவ ஞானிகளும், மனித நேய சிந்தனையாளர்களும் இன்னமும் பிறக்க வேண்டும் என்கிற விருப்பத்தை முன் வைத்திருக்கிறார்.
நம்மிடம் இன்னும் பதில்களால் நிறைவு பெறாத நிறைய கேள்விகள் இருக்கின்றன. இந்தப் பூமிக்கும் மனிதர்களுக்கும் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்கிற எதிர்பார்ப்போடு வந்திருக்கிற 'ஞானகுரு'விடம் கேளுங்கள்... பதில்கள் உங்கள் விருப்பப்படி கிடைக்கும்.
- ஆசிரியர்.