சங்க இலக்கியத்தில் குறிப்பாக அக இலக்கியங்களில் முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என ஐவகை இயற்கை சூழலையும் இவ்வியற்கை சூழலில் வாழ்ந்த தமிழ் மக்களின் அக வாழ்வியலையும் கண்ட சங்கப் புலவர்கள் இயற்கைக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பினை ஆய்ந்து முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என இலக்கணம் வகுத்து பாடல்கள் பாடினர்.
இம்மூன்று பொருள்களில் முதல்பொருளான நிலமும் பொழுதும் அக உணர்வாகிய காதல் உணர்வைத் தோன்றச் செய்கின்றன. கருப்பொருள்களான மரம், செடி, கொடி, விலங்கு போன்ற இயற்கை சூழலோ காதல் உணர்வைத் தூண்டச் செய்கின்றன. இவை இரண்டும் மானிடத்தை புணர்தல், இருத்தல், பிரிதல், ஊடல்,இரங்கல் எனும் ஐந்து உணர்ச்சிப்பொருளான உரிப்பொருள்களாக உள்ளன. இம்மூன்றையும் புலவர்கள் கையாண்டு பாடிய முறைகளையே இந்நூல் வெளிப்படுத்துகின்றது.