திருவள்ளுவர் டிகா அறிஞர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உலகப் பொது மறையை வழங்கக்கூடிய அளவிற்கு மிகுந்த ஞானத்துடன் இருந்துள்ளது மிகப்பெரிய அற்புதமாகவே உள்ளது. அவர் குறள் வெண்பா வடிவத்தில் திருக்குறள் முழுவதையும் வழங்கியுள்ளார். எண்ணும் கருத்தை குறள் வெண்பாவில் வடிப்பது எளிய பணி அல்ல. அப்படிப்பட்ட பணியை அற்புதமாக செய்துள்ளார் திருவள்ளுவர். திருவள்ளுவர் ஒரு மலை என்றால் இந்த புதிய குறள்களை எழுதியுள்ள நான் ஒரு மடு என்று தான் சொல்ல வேண்டும். அவரைப் போன்று ஞானத்துடனோ, இலக்கிய இலக்கண அறிவுடனோ நான் இந்த புதிய குறள்களை இயற்றியுள்ளதாகக் கூற முடியாது. எனக்குத் தோன்றிய கருத்துக்களை என்னுடைய திறனுக்கு ஏற்ப குறள் வெண்பாவில் நான் இந்த புதிய குறள்களை இயற்றி உள்ளேன். பிடித்தவர்களைப் போல பேசுவது, செயல்படுவது என்பது ஒரு குழந்தைத் தனம். அதனை 'போலச் செய்தல்' என்று கூறுவார்கள். குறள் வெண்பா வடிவில் நான் இயற்றியுள்ள இந்த புதிய குறள்கள் அப்படிப்பட்ட ஒன்றுதான்!
எவ்வளவுதான் போலச் செய்தாலும் அசல் அசல் தான்! நகல் நகல்தான்! ஆதலால், திருவள்ளுவரின் திருக்குறளோடு இந்த புதிய குறள்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அண்மை காலங்களில் சில நண்பர்கள் மாணவர்களுக்குப் பண்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு உதவுகின்றவாறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. ஆதலால், இந்த புதிய குறள்களை இயற்றும்போது அதற்கு உதவுகின்றவாறு மாணவர்களுக்கு அறிவூட்டக்கூடிய கருத்துக்களைப் புதிய குறள்களாக இயற்ற எண்ணினேன். அந்த வகையில் உருவானது தான் இந்த மாணவர்களுக்கு 100 புதிய குறள்கள் மாணவர்களுக்கு அறிவூட்ட சிறிதளவேனும் இந்த புதிய குறள்கள் உதவுமானால் எனது முயற்சி வெற்றி பெற்றுவிட்டதாக மனநிறைவு அடைய வாய்ப்பாக அமையும்! வருங்காலத்தை வடிவமைக்கக் கூடிய இன்றைய மாணவர்களின் கையில் இந்த புதிய குறள்களை சிற்றுளியாக ஒப்படைக்கின்றேன். மாணவர்கள் தங்கள் வாழ்வைச் செதுக்கிக் கொள்வதில் இந்த புதிய குறள்கள் சிறிதளவேனும் உதவி புரியுமானால் மகிழ்வடைவேன்.