நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மக்கள் தலைவர், நெஞ்சுடை மனிதர், இவ்வளவு ஆற்றலும் பண்பும் அணி செய்யப் பல துறைகளிலும் முகடு எய்தி முத்திரை பதித்த இவர் அண்ணா என்று மக்களால் அன்பொழுக அழைக்கப்பெற்றார், பின்னர் பேரறிஞர் அண்ணா என்றும் போற்றப் பெற்றார். தமிழ் உரைநடைக்குக் கவிதை வனப்பும் இசையும் சேர்த்து, சொல்லாக்கங்களையும் தொடராக்கங்களையும் செய்ததுடன் புதுப்புது இலக்கிய வடிவங்களையும் ஈந்த அண்ணா தமிழின் துறைதோறும் கொடை நல்கிய இலக்கிய மொழிக்கொடை வள்ளலாகத் திகழ்கிறார். அரசியல் உலகைப் பேரறிஞர் அண்ணா எனப்புகழ்ந்து பெருமை பெறுகிறது.