இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்.
பொதுவாக திரைப்படப் பாடல்கள் காலத்தால் வென்று நிலைத்து நிற்கக் கூடிய ஆற்றல் உள்ளவை அல்ல. புதிய பாடல்கள் பிறக்கப் பிறக்கப் பழைய பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மறக்கப்படும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது அனுபவமும், கவிதை நயமும் தான் காரணம் ஆகும். கவியரசர் கண்ணதாசன் தான் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த சம்பவங்களை, காதல், ஏமாற்றத்தை, வேதனையை, சோதனையை, பக்தியை அப்படியே பாட்டாக வடித்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால் தமிழ் மக்களின் மனதில் சட்டென்று பதிந்து விட்டது. காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு.தனது மொழி ஆளுமையினாலும், கற்பனை நயத்தாலும், கருத்துச் செழுமையாலும், எளிய நடையினாலும் தனது இசைப் பாடல்களை காலத்தால் அழியாத காவியங்களாக்கிவிட்டார் கவியரசர். எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில் செய்துவிட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். கூறவும் மாட்டான். ஆனால் கவியரசரோ ஒழிவு மறைவின்றி தனது திரையிசைப் பாடல்கள் வாயிலாகவும் பிற படைப்புகளின் வாயிலாகவும் தனது தவறுகளையும் உண்மைகளையும் தெரிவித்திருக்கின்றார். மேலும் தமிழக சட்டசபையில் அரசவைக் கவிஞராக இருந்து புகழ் பெற்றவர் கவியரசர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.