சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுத்தேன்.
ஒவ்வொரு கவிதையும் முத்துக்கள். எனக்கு பிடித்த கவிதைகளை/ சிந்தனைகளை குறித்து வைத்துக்கொண்டே வந்தேன். ஆனால், அத்தனையையும் எழுத முடியவில்லை. சில கவிதைகள் பெரிய விசயங்களை எளிதான வார்த்தைகளில் சொல்லிவிடுகிறது. சில சிந்தனைகள் மிக ஆழமாக நம்மை யோசிக்க தூண்டுகிறது. இந்த நூலை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளனர். மொழிபெயர்ப்பை இளவல் ஹரிஹரன் அருமையாக செய்து இருக்கிறார். எளிய தமிழில் கருத்துகளை சிதைக்காமல் செய்து இருக்கிறார் என சொல்லலாம். இதே 'மணலும் நுரையும்' புத்தகம் வேறு சிலரால் வெவ்வேறு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு இருப்பது தெரிகிறது. இந்த புத்தகத்தின் சிறப்பாக இன்னொன்றை சொல்ல வேண்டுமென்றால், தலைப்புகள் இல்லாமலே கவிதைகளை/ சிந்தனைகளை தொகுத்து இருக்கின்றனர். படிக்கும் போதே கோர்வையாக இருக்கிறது! வாழ்த்துகள்.